Tuesday 10 November, 2015

வண்ணார் கிளர்ச்சி -- கோ. ரகுபதி


  

சமூக அறிவியல் புலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த ஆராய்ச்சியில் வண்ணார் சாதி குறிப்பிட்டுக் கூறும்படி கவனப்படுத்தப்பட்டிருக்கவில்லை. குறைந்த மக்கள்தொகை, அரசியல் அதிகாரமின்மை, வலுவான அமைப்பின்மை போன்ற இன்றைய சூழல்களை அம்மக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களாகக் கூறலாம். முனைவர் பட்டத்திற்கான தரவு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது 2003ஆம் ஆண்டு “வண்ணான் பாட்டுக்கு” எதிரான போராட்டம் குறித்த ஆவணம் ஒன்று என் கைக்குக் கிட்டியது. பின்னர் ஆவணம் சேகரிக்கும்போதெல்லாம் அப்போராட்டம் தொடர்பான வேறு ஆவணங்களையும் தேடிக்கொண்டிருந்தேன். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் சென்னை பெரியார் திடல், ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் ஆவணங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது வண்ணார்களின் போராட்டம் தொடர்பான மேலும் சில ஆவணங்கள் கிடைத்தன. இவற்றை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.
சமூகப் பண்பாட்டு ஒடுக்குமுறை
இந்து சாதியக் கட்டமைப்பில் ஆதிக்கச் சாதியினர், தலித்துகள் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வண்ணார்கள் வெளுப்புத் தொழில் செய்கின்றனர். சில பகுதிகளில் அவர்கள் ஏகாலி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆதிக்கச் சாதியினருக்கு வெளுக்கும் வண்ணார்கள் தலித்துகளுக்கு வெளுப்பதில்லை. புறத்து வண்ணார், தீண்ட வண்ணார், புதிரை வண்ணார் என்று அழைக்கப்படும் பிரிவினர் தலித்துகளுக்கு வெளுக்கின்றனர். சமூகக் கட்டுமானத்தில் படிநிலை அடுக்கு கட்டமைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு படிநிலையிலுள்ளோருக்கும் வெவ்வேறு வண்ணார்கள் வெளுப்புத் தொழில் செய்கின்றனர். அதாவது வண்ணார்கள் ஒருபடித்தானவர்கள் அல்ல. பல சாதியினருக்கும் வெளுக்கும் வெவ்வேறு வண்ணார்களுக்குள் எந்தவிதமான உறவும் கிடையாது. அவர்களுக்குள் அசமத்துவ படிநிலை உண்டு. நிலவுடைமைச் சாதிகளுக்கான சேவகம் செய்த வண்ணார்கள் இடைநிலைச் சாதிகளுக்கான வண்ணார்களைவிடவும் தாங்கள் உயர்வானவர்கள் என்றும் இவ்விருவரும் தலித்துகளையும் அவர்களுக்கு வெளுக்கும் புதிரை வண்ணார்களையும் தங்களுக்குக் கீழானவர்கள் என்றும் கருதி அதற்கேற்றாற்போல் அவர்களிடம் நடந்துகொள்ளும் போக்கு இருந்தது/இருக்கிறது. காலனியாட்சிக் காலத்தில் சாதிகளை வகைப்படுத்தியபோது பறையர், சக்கிலியர் போன்ற சாதிகள் வகைமைப்படுத்தப்பட்ட “ஒடுக்கப்பட்ட வகுப்புகள்” (Depressed Classes) என்ற வகைமைக்குள் இணைக்கப்படவில்லை மாறாக, ஆதிக்கச் சாதி இந்துக்கள் வகைமைப்படுத்தப்பட்டிருந்த “பிற இந்துக்கள்” (Other Hindus) என்ற வகைமைக்குள் வண்ணார்கள் இணைக்கப்பட்டிருந்தனர். சென்னை மாகாணத்தில் (ஆந்திரா மாநிலம்) குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்லாஸ் (வண்ணார்) குற்றப் பரம்பரையினரெனப் பதிவுசெய்யப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டும் ஒடுக்கப்பட்டோர் வகைமைக்குள் இணைக்கப்பட்டிருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு இருந்த சமூகப் பொருளாதார நிலைமை வண்ணார்களுக்கு இல்லை என்று கருதிய காலனியாட்சியினர் வண்ணார்களை ஒடுக்கப்பட்ட வகுப்புகள் வகைமைக்குள் இணைக்கவில்லை. அதாவது வண்ணார்களின் சமூகப் பொருளாதார நிலைமையானது ஒடுக்கப்பட்ட வகுப்புகளை விடவும் மேலானது என்று பொருளாகும்.1 இது வண்ணார்களின் உண்மையான கடந்த காலம்தான். “பிற இந்துக்கள்” வகைமைக்குள் இணைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு வண்ணார்கள் இணையானவர்கள் அல்ல மாறாக, அவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமையைச் சாதிய சமூகக் கட்டமைப்பு உருவாக்கியுள்ளது. வண்ணார்கள் தலித்துகளைவிடவும் மேலானவர்கள் என்று கருதப்பட்ட போதிலும் அவர்கள் பின்னவர்களைப் போல் “பிற இந்துக்களுக்கு” அடிமைத் தொழில் செய்தனர்.
வெவ்வேறான வண்ணார்களுக்குள் படிநிலை தொழிற்பட்ட போதிலும் அவர்கள் செய்த / செய்துவரும் பணிகள் ஒருபடித்தானவை. அவர்கள் அனைவரும் “வண்ணான்” “வண்ணாத்தி” என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களின் வசிப்பிடம் வண்ணாக்குடி, துணிவெளுக்கும் இடம் வண்ணாத்திப்பாறை, வெளுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் வண்ணாக்காரம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு பொருளை ஒரு சாதியினர் பயன்படுத்தும் காரணத்தால் அப்பொருளுக்கு அச்சாதியின் பெயர் சூட்டப்பட்டது வண்ணாக் காரம் மட்டுமேயாக இருக்கக்கூடும். துணிகளில் ஏற்படும் அழுக்கை நீக்குதல், சாயமிடுதல், பெண்களின் தீட்டு உடுப்பு வெளுத்தல், இன்ப நிகழ்ச்சிகளின்போது துணிகளால் பந்தலை அலங்கரித்தல், கோயில் திருவிழாவின்போது தீப்பந்தம் தயாரித்தல், துன்ப நிகழ்ச்சிகளில் மரியாதை செய்வதற்காக மாத்து2 விரித்தல் என ஒரேவிதமான பணிகளையே அனைத்து வண்ணார்களும் செய்கின்றனர்.
சலவை எந்திரம், உடுப்பு தேய்ப்பான் போன்ற இயந்திரங்களின் உபயோகம் அதிகரித்தல், இன்ப நிகழ்ச்சிகளுக்கென மண்டபத்தைப் பயன்படுத்தும் போக்கு இவற்றின் விளைவால் இன்று வண்ணார்கள் ஒருசில சமூகப் பண்பாட்டுப் பணிகளை மட்டும் செய்கின்றனர். மேற் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கெனப் புறம்போக்கு நிலத்தில் அவர்கள் குடியிருப்பதற்கு நிலம், வருடத்திற்கு ஒருமுறை நெல், அன்றாடம் ஊர்ச்சோறு போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களின் சார்பு நிலை, செய்த பணி ஆகியவற்றின் காரணமாகத் தீண்டாமை, சுரண்டல், புறக்கணிப்பு, பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு உள்ளாகினர். பிறரை இழிவுபடுத்துவதற்கும்கூட வண்ணார்களைத் தொடர்புப்படுத்தி இழி சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. “வயிறா வண்ணாந்தாழியா”, “வயிறா வண்ணாஞ்சாலா”, “வாடா வண்ணாஞ்சாலு”3, “அடிப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்” போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்4.
வண்ணார்கள் செய்யும் பணிகளுக்காக வழங்கப்படும் ஊர்ச்சோறு அவர்களை இழிவுபடுத்துகிறது. வண்ணார்கள் யாருக்கெல்லாம் பணி செய்கிறார்களோ அவர்களின் வீடுகளில் அன்றாடம் இரவில் உணவு வாங்கிக் கொள்ளும் வழமைக்குப் பெயர் ஊர்ச்சோறு. அவர்களுக்குத் தேவையில்லாதிருந்த போதிலும்கூட. ஊர்ச்சோறு வாங்கவில்லை என்றால் ஆதிக்கச் சாதியினர் அது தங்களை அவமதிக்கும் செயலாகக் கருதுவர். எனவே, ஊர்ச்சோறு வழமையைச் சாதியாதிக்கத்தின் ஒரு வடிவமெனலாம். ஊர்ச்சோறு பெறுவதற்குப் பொதுவாக வண்ணார் பெண்கள் செல்வது வழமை. அப்போது அப் பெண்களின் பெயரைக் கூறுவதற்குப் பதிலாக சாதிப் பெயரைக்கூறி அவமதிப்பது, காத்திருக்கச் செய்து மிச்ச உணவைக் கொடுப்பது, பாலியல்ரீதியாக வன்புறுத்துவது போன்ற ஒடுக்குமுறைகளை வண்ணார் பெண்கள் அனுபவித்தனர்/ அனுபவிக்கின்றனர். பல வீடுகளில் அவர்கள் சோறு எடுப்பதால் அவற்றின் அளவு அவர்களின் தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் ஆனால் அவையனைத்தையும் அவர்களால் உண்ண இயலாது. இருப்பினும் பல வீடுகளிலிருந்து சோறு எடுப்பதால் அவையனைத்தையும் வண்ணார் குடும்பங்கள் உண்ணுவதாக ஆதிக்கச் சாதியினர் கருதினரோ என்னவோ தெரியவில்லை. அதிகமாக உண்ணும் நபர்களையும் பெரிய தொந்தி உடையவர்களையும் இது “வயிறா வண்ணாந்தாழியா”, “வாடா வண்ணாஞ்சாலு” என்று ஏளனம் செய்யும் வழமை உள்ளது. இது போல கலை வடிவத்திலும் வண்ணார்கள் அவமதிக்கப்பட்டனர். இதனால் அதற்கெதிராகப் போராடினர்.
சமூகப் பண்பாட்டுத் தளங்களில் தங்கள்மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை, புறக்கணிப்பு போன்றவற்றிற்கு எதிராக வண்ணார்கள் நடத்திய போராட்டங்களை இரண்டாக வகைப்படுத்திக் கொள்ளலாம்: 1) பதிலிப் போராட்டம் 2) நேரடிப் போராட்டம். பதிலிப் போராட்டம் அவ்வப்போது நிகழக்கூடியது இப்போராட்டம் நிகழ்வது ஒடுக்குபவருக்குத் தெரியாது. எவ்வித அமைப்பின் கீழும் அணிதிரளாமல் ஒடுக்கு முறையை அனுபவிக்கும் நபர் அப் போராட்டத்தை நடத்துவார். தங்களை ஒடுக்குகிறவர்களை நேரடியாக எதிர்த்துப் பேச இயலாததால் அவருடைய பொருட்கள்மீது நடத்தப்படும் போராட்டம் பதிலிப் போராட்டம். இது உடலோடு ஒட்டி உறவாடும் உடுப்பின் மீது நிகழ்த்தப்பட்டது. அதாவது, வண்ணார்கள் ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்வினையை ஒடுக்குமுறையாளரின் உடுப்பின் மீது காட்டினர். வெளுத்த உடுப்பைக் கொடுப்பதற்குக் காலதாமதம் செய்தல், உடுப்பை அடித்தல், கும்முதல், கிழித்தல் இவையெல்லாம் ஒடுக்குமுறையின் தன்மைக்கேற்ப நிகழும். வண்ணார்கள் உடுப்பை வெளுப்பதை ஒடுக்குமுறையாளரின் உடலை வெளுப்பதாகக் கருதி தங்களின் கோபத்தைத் தணித்தனர். நேரடிப் போராட்டம் அமைப்பின் கீழ் அணிதிரண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டது. காலனியாட்சிக் காலத்தில் வண்ணார்கள் நடத்திய இரண்டு நேரடிப் போராட்டங்கள் குறித்த தரவுகள் கிட்டின: 1) தங்களைப் புறக்கணிப்பவர்களைப் புறக்கணித்தல், 2) இழிவுபடுத்தும் கலை வடிவங்களை ஒழித்தல்.
புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு
சாதி அரசியலில், இன்ப நிகழ்வுகளை வெகுவிமரிசையாக ஆதிக்கச் சாதியினரைப் போல் தலித்துகளும் இழிதொழில் செய்யும் சாதியினரும் கொண்டாடக் கூடாது என்பதற்காகப் பின்னவர்கள் தங்களின் சுபகாரியங்களின் போது மேளம் வாசித்தல், குதிரையில் ஊர்வலம் செல்லுதல் போன்றவை கூடாது என்ற சாதியாதிக்கச் சட்டம் இருந்தது. புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு போராட்டம் சாதியாதிக்கச் சட்டங்களை ஆதிக்கச் சாதியினர் செயல்படுத்தியதும் அதை வண்ணார்கள் புறக்கணித்ததாலும் விளைந்தது. கரூரில் மேளம் வாசிக்கும் செங்குந்தர்களுக்கு வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் இழிதொழில் செய்த போதிலும் பின்னவர்கள் இரு பிரிவினர்களையும் முன்னவர்கள் தங்களுக்கும் கீழானவர்கள் என்ற முறையில் சாதியாதிக்கச் சட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக அவர்கள்மீது புறக்கணிப்பைக் கடை பிடித்தனர். அதாவது அவர்களுக்கு மேளம் வாசிக்க மறுத்தனர். இதனால் வண்ணார்களும் மருத்துவர்களும் செங்குந்தர்களுக்கு இழிதொழில் செய்வதைப் புறக்கணிக்கத் தொடங்கினர். ஆதிக்கம், சார்புநிலை உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை அப்போராட்டத்தில் இருந்தது. இதனால் செங்குந்தர்கள் அப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக வேறோர் ஆயுதத்தைக் கையில் எடுத்தனர். வெளுப்புத் தொழில் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில் குடியிருப்பதிலிருந்து வண்ணார்களையும் மருத்துவர்களையும் அப்புறப்படுத்துவதற்காகச் செங்குந்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை எதிர்கொள்ளும் விதமாகவும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும் வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் முடிவுசெய்தனர். மேலும் இதர அமைப்புகளின் ஆதரவையும் திரட்டினர். அவர்கள் கரூர் மாவடியான் கோவிலில் 1932, ஜூன் 21ஆம் தேதி இரண்டாவது முறையாக சுமார் 150 பேர் கூடினர். இக்கூட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோரும் பங்கெடுத்தனர். கூட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடன் பத்திரிகை ஊழியர் கே. ஆர். தலம்பநாத பிள்ளை இப்போராட்டத்தைச் சமூக முன்னேற்றத்தின் அங்கமெனக் கருதி, தொழில் மறுப்புச் செய்தோருக்குத் தொழில் மறுப்புச் செய்த வண்ணார்களையும் மருத்துவர்களையும் பாரட்டியதோடு அப்போராட்டத்தைத் தொடர்வதே சரியானதெனப் பேசினார். கே. எ. பசுபதி முதலியார், மருத்துவர் கே. எம். தர்மலிங்க பண்டிதர், கே. எம். சின்னசாமி மேஸ்திரி, மருத்துவர் வி. எஸ். நடேச பண்டிதர், டி. எஸ்.பெரியண்ண பண்டிதர், கே. எம்.ராஜூ மேஸ்திரி, சின்னு மேஸ்திரி ஆகியோர் இப்போராட்டத்தைத் தொழிலாளர் போராட்டமாக இனம்கண்டு மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் வெற்றிபெறுவதையும் அதுபோல இவர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டுமென வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் சமத்துவப் பாடல்களும் பாடப்பட்டன.5 இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதா அதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்பதை அறிந்துகொள்ளமுடியவில்லை.
வண்ணார்களை ஒருங்கிணைத்த வண்ணான் பாட்டு
கலை இலக்கியம் சாதியத்திற்கு அப்பாற்பட்டது இல்லை. ஆதிக்கச் சாதிகளைப் புகழ்வதும் ஒடுக்கப்பட்ட சாதிகளை இழிவுபடுத்துவதும் கலை இலக்கியத்தின் உள்ளீடாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் திரைப்படங்களும் பாடல்களும் ஆதிக்கச் சாதியைப் போற்றுகிறது. உதாரணங்களாகத் தேவர் மகன், சின்னக் கவுண்டனர், மறுமலர்ச்சி ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் “தேவர் காலடி மண்ணே . . .”, “கண்ணுபட போகுதய்ய சின்னக் கவுண்டரே . . .” “ராசு படையாச்சி . . .” போன்ற பாடல்களைக் கூறலாம். ஆனால் இத்தகைய புகழ்ச்சிப் பாடலாக அல்லாமல் அலையோசை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “போராடடா வாளேந்தடா . . . இன்னும் பள்ளுபறை என்னும் சொல்லும் . . .” என்னும் பாடல் தங்களின் இழிநிலையிலிருந்து விடுபடுவதற்காகப் போராட வேண்டும் என வலியுறுத்துகிறது. சில கிராமங்களில் இப்பாடலை இசைக்கச் செய்து தலித் இளைஞர்கள் ஆயுதமேந்தி நடனமாடியதும் நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்ற சாதி மோதலை ஆராய்ந்தபோது அங்கு மேற்குறிப்பிட்ட பாடல்கள் முக்கியப் பங்காற்றியிருப்பதைக் காண முடிந்தது. தங்களின் விழாக்களின்போது ஆதிக்கச் சாதியினர் சாதிப் புகழ்ச்சிப் பாடலையும் தலித்துகள் போராட்டப் பாடலையும் ஒலிபரப்பியிருப்பதும் மோதலுக்கான உடனடிக் காரணமாக இருந்தது. தென்தமிழகத்தில் நடைபெற்ற சாதி மோதலுக்குப் பேருந்துகளில், தங்கள் சாதியைச் சேர்ந்த நடிகர்கள் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலை ஒலிபரப்ப வேண்டுமென்று கோரியது காரணமாக இருந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால் திரைப்படப் பாடல்கள் சாதி மோதல் உயிர்த்துடிப்புடன் நிகழ்வதற்கு வழிகோலுகிறது. இந்த நிகழ்கால மோதல் கடந்த காலத்தின் தொடர்ச்சி. அந்தக் கடந்த காலம் வண்ணான் பாடலுக்கெதிரான போராட்டம்.
பாடல் கடந்த காலங்களில் தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் இடம்பெற்றிருந்தது. இவற்றில் சாதி குறித்த பாடல்களும் உண்டு. அவ்வாறு பாடப்பட்ட பாடல்களில் ஒன்று வண்ணான் பாட்டு. “வண்ணான் வந்தானே, வண்ணாத்தியும் வந்தாளே . . .” என்று தொடங்கும் பாடல் மதுரையைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவரால் பாடப்பட்டது. ஒடியன் கிராமபோன் இசைத்தட்டில் பதிவுசெய்யப்பட்ட அப்பாடல் தேநீர்க் கடை, கச்சேரி, தெருக்கூத்து போன்ற பொதுவெளிகளில் ஒலிப்பரப்பப்பட்டது. அப்பாடல் வண்ணார்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அப்பாட்டில் வரும் வரிகள் தங்களை இழிவுபடுத்துவதாக வண்ணார்கள் கருதினர். காரணம், அப்பாடலில் வண்ணார் பெண்களின் அன்றாட பணிகள் குறித்த வரிகள் இடம்பெற்றிருந்தது. இவ்விடத்தில், அன்றாடப் பணிகளை விவரிப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்ற வினா எழக்கூடும்.
ஆதிக்கச் சாதியினருக்கு வண்ணார்கள் செய்த/செய்துவரும் பணிகள் அவர்களாகவே மனமுவந்து ஏற்றுக்மேகொண்டதல்ல மாறாகச் சாதிக் கட்டமைப்பின் விளைவு. விருப்பமின்றி செய்த பணிகளை எந்த வடிவத்திலும் யார் பிரதிபலித்தாலும் அது செய்யப்பட்டவர்களுக்கு வேண்டுமென்றால் ரசிக்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால் செய்தவர்களுக்கு வெறுக்கத்தக்கதாகவே இருக்கும். உண்மை என்னவென்றால் “வண்ணான் பாடல்” ஆதிக்கச் சாதியினரால் ரசிக்கப்பட்டது வண்ணார்களால் வெறுக்கப்பட்டது. ஆங்காங்கே பொதுவெளிகளில் அப்பாடல் ஒலிபரப்பப்பட்டதால் வண்ணார்களிடத்தில் அதற்கெதிரான கொதிப்பு உருவானது. அப்பாடலை வண்ணார்கள் எதிர்க்கத் தொடங்கினர். போராட்டத்தின் வடிவமானது ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு மூலமாக அப்பாடல் தடைசெய்யப்பட வேண்டுமென்று அரசாங்கத்திடம் முறையிடுவதில் தொடங்கி அப்பாடல் இடம்பெற்றிருந்த இசைத்தட்டை நொறுக்குவதில் முடிவடைந்தது.
வண்ணார் குல மகாஜன சங்கத்தின் மூலமாக அப்பாடலுக்கு எதிரான முதல் குரல் ஒலித்தது. அச்சங்கத்தின் நிர்வாக சபை கூட்டம் திருச்சிராப்பள்ளியில் 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி நாகை குரு குமாரசாமி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் வண்ணான் பாட்டு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “வண்ணார் குல மக்களை இழிவாகவும் தூஷணையாகவும் வெறுப்பு உண்டாகும்படியாகவும் பாடும்படியான பாட்டாகிய “வண்ணான் வந்தானே! வண்ணாத்தியும் . . .” என்ற பாட்டை ஒருவராகிலும் அல்லது பலர் கூடிய ஒரு நாடக சபையரால் நாடக மேடைகளிலும் பாடக் கூடாதெனவும் ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, முனிஸிபாலிட்டி, யூனியன் போர்டு முதலிய சபைகளின் தலைவர்களைத் தடைசெய்யும்படி கேட்டுக்கொள்கிறது”, “அந்த விஷயத்தை ஜில்லா கலெக்டர் அவர்களிடம் தெரிவித்துக்கொள்வதற்கு நிர்வாக சபை அங்கத்தினர்களில் தோழர்கள் எம். நல்லசாமி, எம். துரைசாமி, டி.பரிமணம், தாவுத்கான், பி. சின்னமுத்து, பி. முத்துசாமி, டி. எம். சிவசுப்ரமணியம், குப்புசாமி, என். பனையடியான் முதலிய அங்கத்தினர்கள் அடங்கிய தூதுக் கூட்டம் அனுப்பி வைக்க வேண்டும்”, “கூடிய சீக்கிரம் வண்ணார்குல மாகாண மாநாடு கூட்ட வேண்டுமெனவும் அதன் மூலமாக அந்தத் தீர்மானத்தை மாகாணம் முழுவதும் பிரசாரம் செய்து பரவச் செய்ய வேண்டும்”, “இத்தீர்மானங்களை ஜில்லா கலெக்டர், திருச்சி முனிசிபல் சேர்மன், முனிஸிபல் கமிஷனர், ஜில்லா போலீஸ் சூப்பிரண்டெண்டு முதலியோருக்கும் பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு இக்கூட்டம் காரியதரிசிக்கு அதிகாரமளிக்கிறது” ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.6
இக்கூட்டம் நடைபெற்று ஒரு மாதம் நிறைவுபெறுவதற்குள் வண்ணார்கள் மீண்டும் கூடினர். திருச்சிராப்பள்ளியில் 1933ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கே. ஏ. பி. விஸ்வநாதம் தலைமையில் தென்னிந்திய வண்ணார்குல மகாஜன சங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “வண்ணான் வந்தானே” பாட்டு வண்ணார்களை இழிவுபடுத்துவதால் அப்பாட்டைச் சட்ட விரோதமானது என்று அரசாங்கம் பிகரடனம் செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.7 அப்பாடலைத் தடைசெய்யக் கோரி திருச்சிராப்பள்ளி, ஊட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த வண்ணார்கள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை அனுப்பினர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவான குரல் வண்ணார் அல்லாத சாதியினரிடமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மெட்ராஸ் மாகாணப் பேரவை உறுப்பினர்களுமான எம். தேவதாசன், வி. ஐ. முனிசாமி பிள்ளை ஆகியோர் அப்பாடலுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். எம். தேவதாசன் அப்பாடலுக்கு எதிராக மனு கொடுத்தார். மெட்ராஸ் மாகாணப் பேரவையில் அப்பேரவையின் உறுப்பினரான வி. ஐ. முனிசாமி பிள்ளை அப்பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். “வண்ணான் பாட்டு” வண்ணார் பெண்களின் அன்றாடப் பணிகளை விமர்சிப்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்று அவர் எழுப்பிய கேள்விக்கு அப்பாடலில் ஒன்றுமில்லை அதற்கெதிரான நடவடிக்கை அவசியமில்லை என்று உள்ளாட்சி உறுப்பினர் முகமது உஸ்மான் பதிலளித்தார்.8 அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையிலும் கேள்வி எழுப்பியதிலும் கிடைத்த ஏமாற்றம் வண்ணார்களை அடுத்த கட்டப் போராட்டத்திற்குத் தள்ளியது. நீதிமன்றத் தலையீட்டின் மூலம் அப்பாடலைத் தடை செய்வதற்காக மாயாவரம் துணை நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இது “நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்ட வழக்கல்ல” என்று நீதிபதி தீர்ப்பு கூறிவிட்டார்.9 அரசாங்கத்தின் புறக்கணிப்பின் பின்னணி சமூகப் பண்பாட்டு உள்விவகாரங்களைப் புறந்தள்ளும் காலனியாட்சியின் கொள்கையே. விளைவு அப்பாடல் பொதுக்களங்களில் ஒலிபரப்பப்பட்டபோது வன்முறை வெடித்தது. அரசாங்கத்தின் புறக்கணிப்பும் ஒருசில இடங்களில் நிகழ்ந்த வன்முறையும் அப்பாடலுக்கெதிரான போராட்டத்தை அடுத்தகட்டத்திற்குத் தள்ளியது.
அப்பாடலுக்கு எதிரான மாநாடு நடத்துவதற்குத் தீர்மானித்த வண்ணார் மகாஜன சங்கம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. திருச்சிராப்பள்ளியில் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் தென்னிந்திய சலவைத் தொழிலாளர் மாநாடு என். சிவராஜ் தலைமையில் நடைபெறும் எனவும், மெட்ராஸ் மாகாண இரண்டாவது மந்திரி கனம் பி. டி. ராஜன் மாநாட்டைத் திறந்துவைக்கிறார், எ. கருப்பணன் வரவேற்பு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மாநாட்டிற்குத் தீர்மானங்கள் அனுப்புகிறவர்கள் 1934ஆம் ஆண்டு 15 ஜனவரி தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்றும், வெளியூரிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்குச் சாப்பாடும் இடவசதியும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குடும்ப சகிதமாய் வரும் பிரதிநிதிகள் தங்களுக்குத் தேவையான வசதிகளைக் குறித்து தெரிவிக்க வேண்டுமென்றும் அவ்வறிவிப்பில் கூறப்பட்டது. வரவேற்புக் கட்டணம், பிரதிநிதி கட்டணம் ஆகியன முறையே ரூ. 2, ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்டது. எம். துரைசாமி, டி. எம். சிவசுப்பிரமணியம் ஆகியோர் மாநாட்டின் காரியதரிசிகளாகச் செயல்பட்டனர். மாநாட்டு வேலைகளுக்காக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பல மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தனர்.10 இம்மாநாடு குறித்து புரட்சி இதழில் விளம்பரம் செய்யப்பட்டது.11
நொறுக்கப்பட்ட இசைத்தட்டு
அறிவித்தபடி தென்னிந்திய சலவைத் தொழிலாளர் மகாநாடு திருச்சிராப்பள்ளி நகராட்சிப் பொது அரங்கத்தில் 1934ஆம் ஆண்டு ஜனவரி 22இல் மாலை தொடங்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி திருவாங்கூர், மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நவீன வரலாற்றில் வண்ணார்கள் முதன்முறையாகப் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளாகக் கூடியது வண்ணான் பாடலுக்கெதிரான போராட்டத்தில்தான். வண்ணார்களுக்குள் பல பிரிவுகள் இருக்கும்போது இப்போராட்டம் எந்த வண்ணார்களால் நடத்தப்பட்டது என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை மெட்ராஸ் மாகாணத்தின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி இதர ஒருசில பாகங்களிலிருந்தும் வண்ணார்கள் பங்கெடுத்திருப்பதால் அனைத்து வண்ணார்களும் இதில் பங்கேற்றிருக்கலாம் என்று கருதலாம்.
“வண்ணான் பாட்டு” வண்ணார்களை ஒருங்கிணைத்தது என்றால் அது மிகையான கூற்றல்ல. தலித் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தோரும் வண்ணார்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கலந்துகொண்டனர். சென்னை அரசாங்கத்தின் மந்திரி பி.டி. ராஜன், திருநெல்வேலி சேர்மன் ரெங்கநாத முதலியார், மீனாம்பள்ளி ஜமீன்தார் கே. சி. எம். வெங்கடாஜல ரெட்டியார், பி. ரெத்தினவேலு தேவர், பி. கே. பி.ராஜா சிதம்பர ரெட்டியார், வி. மாணிக்கம் பிள்ளை, கே.எம். பாலசுப்பிரமணியம், பெ. விசுவநாதம், இந்தியா இதழின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர், எம். பாலகிருஷ்ணன், டி.வி.கே. நாயுடு, “ஐக்கிய அரசு” என்.எஸ். கோவிந்தசாமி, டி. சிவஞானம், நீலாவதி, ஆர். மருதை, பி. சிவபிச்சை, மதுரை டாக்டர் அழகிரிசாமி, முத்துசாமி, கரூர் கே. பசுபதி ஆகியோர் உட்பட சுமார் 700 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். பி.டி. ராஜன், என். சிவராஜ் ஆகியோரைத் திருச்சிராப்பள்ளி மெயின்கார்டு கேட்டிலிருந்து (சத்திரம் பேரூந்து நிலையம்) வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைந்து வந்தனர். பி.டி. ராஜனுக்கு திருச்சி சிவசுப்பிரமணியம், சிவராஜுக்கு டாக்டர் அழகிரியும் வரவேற்பு பத்திரம் வாசித்தனர். மதுரை முத்துசாமி மாநாட்டைத் திறந்து வைக்கும்படி பி.டி. ராஜனை கேட்டுக்கொண்டார். கி. ஆ. பெ. விசுவநாதம் அதனை ஆமோதித்தார். பி. டி. ராஜன் திறப்புவிழா உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார் கே. எம். பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்தார். அப்பாடல் தொடர்பாக பி. டி. ராஜன் இவ்வாறு பேசினார்: “நீங்கள் எனக்குக் கொடுத்த பத்திரத்தில் உங்கள் சமூகத்தையும் உங்கள் மனதையும் புண்படுத்தும் பாட்டைக் குறித்திருக்கிறீர்கள். இது விஷயமாக நியாயஸ்தலத்திற்கும் வழக்கு சென்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. இது விஷயமாக நான் ஒரு யோசனையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் மனதைப் புண்படுத்தும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு வேதனையாகத்தானிருக்கும். ஆகையால் நீங்கள் அதை மறந்துவிட வேண்டும். அங்ஙனம் செய்யாவிட்டால் உங்கள் எதிரிகளுக்குப் பின்னும் இடந்தருவதாகும். எனவே எதிரிகளுக்கு நற்புத்தி கற்பிக்க வேண்டி நீங்கள் பொறுமைகாட்ட வேண்டும். அங்ஙனம் செய்தால் பாட்டின் பழைய ஞாபகம் உங்களை விட்டு அறவே நீங்கிவிடும். எதிரிகளும் வெட்கி தங்கள் செய்கைக்கு வருந்தி விட்டுவிடுவார்கள்”.12 ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள்மீது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படும் அவமானம், வன்முறை போன்றவற்றை மறக்கத்தான் நினைக்கிறார்கள் ஆனால் ஆதிக்கச் சாதியினரோ அவற்றை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும்போது எவ்வாறு மறக்க இயலும்? வண்ணான் பாட்டு பொதுவெளியில் ஆங்காங்கு பாடப்படும்போது வண்ணார்களால் எவ்வாறு அப்பாட்டை மறக்க இயலும்? அப்பாட்டு தரும் அவமானத்தையும் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? அப்பாட்டு அழிக்கப்படும்போது மட்டுமே அது தரும் அவமானத்தையும் மறக்க இயலும். வண்ணார்களின் இப்போராட்டம் அப்பாட்டை ஒழிப்பதற்காகவே.
மாநாட்டின் வரவேற்பு தலைவர் கருப்பண்ணன் தனது உரையில் அப்பாட்டு குறித்துப் பின்வருமாறு பேசினார்: “. . . வண்ணான் பாட்டுத் தொல்லையைப் பற்றியும் சற்று சிந்தித்தல் வேண்டும். இப்பாட்டால் நமது மாகாணத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது; இருக்கிறது. இக்கிளர்ச்சியால் என்ன பயன் ஏற்படுமென்பதைப் பற்றி நான் ஒன்றும் ஜோசியம் கூறப்போவதில்லை. ஆனால் நமது சமூகம் உணர்ச்சி பெற்று, உலக சமத்துவப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டது என்பது இக்கிளர்ச்சியின் மூலமாகத் தெளிவாகிவிட்டது. இத்தகைய கிளர்ச்சிகளெல்லாம் வீணாகிவிடக் கூடாது என்று கருதியே இக்கிளர்ச்சியை ஒன்று கூட்டி பலமானதும் வேகமானதும் சக்தி வாய்ந்ததுமான நமது எண்ணங்களை வெளியாரறியுமாறு செய்ய முற்பட்டோம். அத்தகைய முயற்சியே தான் இன்று நீங்களும் நாமும் இங்கு சந்திக்கக்கூடிய சந்தர்ப்பமாகிய இம்மாநாடாக வந்து முடிந்திருக்கிறது”.13 இம்மாநாட்டின் தலைவர் என். சிவராஜ் வண்ணார் சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பாக உரையாற்றியிருப்பினும் அப்பாடல் தொடர்பாகப் பேசினாரா என்பது தெரியவில்லை. மாநாடு தொடர்பான செய்திகளும் உரைகளும் இடம்பெற்றிருக்கும் ஆதாரங்களில் என். சிவராஜ் உரையிருப்பினும் அப்பாடல் குறித்த அவருடைய கருத்து எதுவும் பதிவாகியிருக்கவில்லை. அவர் அது குறித்து எதுவும் பேசியிருக்கவில்லையா? அல்லது அவரின் பாடல் குறித்த கருத்து பதிவுசெய்யப்படாமல் விடப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.
இரண்டாம் நாள் (23 ஜனவரி 1934) காலை 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் பதினைந்து தீர்மானங்களில் 3, 4, 5 ஆகிய தீர்மானங்கள் “வண்ணான் பாட்டு” தொடர்பான தீர்மானங்களாகும். மூன்றாம் தீர்மானம் அ, ஆ என இரண்டு தீர்மானங்களைக் கொண்டது. தீர்மானம் 3. அ, “மதுரை தோழியர் சிவபாக்கியத்தம்மாள் ஒடியன் கிராம்போன் ரெக்கார்டின் வண்ணான் வந்தானே எனப் பாடி இருக்கும் பாட்டும் முழுவதும் நமது குலத்தினர்களுக்கே மானஹானி உண்டாகுமாறு இருப்பதோடு மேல்படி பாட்டில் அடங்கி இருக்கும் ஒவ்வொரு சொல்லும் நமது குலத்தையும் தொழிலையும் இழிவுபடுத்தி இடித்துக் கூறுவதாக இருப்பதால் மேற்படி ரிக்கார்டை பறிமுதல் செய்வதோடு மேற்படி பாட்டை பொதுமக்கள் அடங்கிய நாடகம், டாக்கீஸ், சங்கீதக் கச்சேரி முதலியவற்றில் ஒருவரும் பாடக் கூடாதெனத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனச் சென்னை அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது”. “இது சம்பந்தமாகத் தலைவர் என். சிவராஜ் அவர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் தூதுக் கோஷ்டியைச் சென்னை ஹோம் மெம்பர் அவர்களிடம் அனுப்புவதென” தீர்மானம் 3.ஆ நிறைவேற்றப்பட்டது.14 அப்பாடலை இனிமேல் பாடாதிருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்க வேண்டுமென்று கூறிய அதே சமயம் “இதுகாலம் பாடியதற்காக அப்பாட்டைக் கொடுத்த மிஸ் சிவ பாக்கியத்தம்மாள் பேரிலும், வெளியிட்டுள்ள ஒடியன் கம்பெனியார் மீதும் மானநஷ்ட வழக்குத் தொடர வேண்டுமென்று” நான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்காவது தீர்மானம் நிறைவேறிய பின்னர் சிவபாக்கியத்தம்மாள் பாடிய “வண்ணான் வந்தானே” பாடல் ஒலி பரப்பப்பட்டது. பாடலின் வரிகள் கனன்று கொண்டிருந்த வண்ணார்களின் கொதிப்பை அதிகரிக்கவே அவர்கள் “வண்ணான் வந்தானே” பாடல் இசைத் தட்டை நொறுக்கித் தீக்கிரையாக்கினர். அப்போது அங்குக் குழுமியிருந்த பங்கேற்பாளர்கள் அதைக் கைத்தட்டி ஆதரித்தனர். அதன் பின்னர், “சலவைத் தொழிலாளர்களிடத்தில் அனுதாபமுள்ள பொது ஜனங்களிடத்தில் வண்ணான் வண்ணாத்தி பிளேட்டுகள் இருக்குமானால் அவற்றைத் தீ வைத்துக் கொளுத்துமாறு” 5ஆம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.15 பின்னர் மேலும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடு பகல் 12 மணிக்கு நிறைவுற்றது. இந்த மாநாட்டிற்குப் பின்னர் சென்னையில் 1934 மார்ச் 27 அன்று நடைபெற்ற சலவைத் தொழிலாளர்களின் கூட்டம் எஸ். குஞ்சிதம் அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை நகரம் முழுவதிலுமுள்ள சலவைத் தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்திலும், வண்ணான் வந்தானே பாட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அப்பாடல் இசைத்தட்டு பறிமுதல்செய்யப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.16 இதற்குப் பின்னர் அப்பாடலுக்கு எதிரான கூட்டம் வேறு எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எனவே அந்த பாடல் அதன் பின்னர் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று நம்புவோம்.
முடிவுரை
சாதியச் சமூகத்தில் தீண்டாமை கொடுமைக்குட்பட்ட சாதியினர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுவதுபோல் வண்ணார்களின் போராட்டமும் சமூகப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகவே முகிழ்த்தது. வண்ணார்களின் எண்ணிக்கை, அவர்களின் அரசியல் பலம் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு “வண்ணான் பாட்டு”க்கெதிராக அவர்கள் நடத்திய கூட்டம், மாநாடு, பாடல் இசைத்தட்டை உடைத்தல், எரித்தல் போன்ற போராட்ட வடிவங்களை கிளர்ச்சி என்றே கூறலாம். வண்ணார்களின் போராட்டத்தில் தங்களைவிடவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட தலித்துகளையும் பிற ஆதிக்கச் சாதியினரையும் தலைமை ஏற்கச் செய்திருப்பதும் அப்போராட்டத்தின் ஓர் அங்கமாக அவர்களையும் பங்கெடுக்கச் செய்திருப்பதும் ஒரு சாதியினர் அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் வேதனையையும் பிற சாதியனரால் புரிந்துகொள்ள முடியுமா, என்ற முன்வைக்கப்படும் கேள்விக்கு பதிலை இப்போராட்டம் தருகிறது. மேலும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி ஜனநாக அமைப்புகளின் பங்கேற்பும் அவசியம் என்பதை வண்ணார்கள் போராட்டம் தெளிவுபடுத்துகிறது. அன்றைய காலங்களில் இருந்த சீர்திருத்த இயங்கங்களின் செயல்பாடு வண்ணார்களின் போராட்டத்தில் வண்ணார் அல்லாத இதர சாதியினரின் பங்கேற்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறுமாதிரி உள்ளது.
புறக்கணிப்புக்குப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திய வண்ணார்களும் மருத்துவர்களும் கூட இணைந்து இன்று போராட்டம் நடத்துவதில்லை. ஆதிக்கச் சாதியினருக்கான வண்ணார்களும் மருத்துவச் சாதியினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றனர். அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோரிடம் போட்டியிட இயலாத நிலைமையில் இருப்பதால் தங்களை அட்டவணை சாதி வகைமைக்குள் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவ்விரண்டு சாதியினரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அக்கோரிக்கையை முன்வைத்து இரண்டு சாதியினர்களும் இணைந்து எவ்வித போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய பொருள்.
அடிக்குறிப்பு
1. G.O. 293 (Public), 07 April 1933; நி.ளி. 440 (Public), 23 May 1933. ஒடுக்கப்பட்ட வகுப்புகள் என்ற வகைமைக்குள் குற்றப் பரம்பரையினர், பழங்குடியினர், தீண்டத்தகாதோர் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.
2. மாத்து என்பது இறந்தவரின் உடலைச் சுடு அல்லது இடுகாட்டிற்குச் சுமந்து செல்லும்போது அவர்கள் தரையின் மேல் நடப்பதற்குப் பதில் துணியில் மேல் நடப்பதற்காக வண்ணார் தரையில் விரிக்கும் வேட்டியாகும். ஒன்றிரண்டு வேட்டிகளைக் கொண்டு ஒருகுறிப்பிட்ட பகுதிவரை வண்ணார் ஓடிஓடிச் சென்று மாத்து விரிப்பார்.
3. வெள்ளாவி வைப்பதற்கு வண்ணார்கள் பயன்படுத்தும் பெரிய பானை சால், சாலா, சாலு என்று சுட்டப்படுகிறது.
4. இந்த ஒடுக்குமுறை ஒடுக்கப்பட்ட வகுப்புகள் வகைமைக்குள்ளிருந்த சாதியினர் அனுபவித்த ஒடுக்குமுறையிலிருந்து பெரிதளவு வேறுபட்டிருக்கவில்லை.
5. திராவிடன், 23 ஜூன் 1932, ப. 5
6. நகரதூதன், 22 அக்டோபர் 1933, ப. 6.
7. நகரதூதன், 05 நவம்பர் 1933, ப. 9.
8. Madras Legislative Council Debates, Vol. LXVIII, 06 November 1933, P 628.
9. நகரதுதன், 04 பிப்ரவரி 1934, ப. 9.
10. நகரதூதன், 07 ஜனவரி 1934, ப. 13.
11. புரட்சி, 14 ஜனவரி 1934, ப. 11.
12. நகரதூதன், 04 பிப்ரவரி 1934, ப, 9.
13. நகரதூதன், 04 பிப்ரவரி 1934,
ப, 10.
14. நகரதூதன், 28 ஜனவரி 1934,
ப. 10.
15. நகரதூதன், 28 ஜனவரி 1934, ப. 10.
16. புரட்சி, 01 ஏப்ரல் 1934, ப. 13. றீ

http://www.kalachuvadu.com/issue-158/page69.asp

Tuesday 21 April, 2009

அம்பேத்கர் : பார்ப்பனப் பெயரா?

அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனரின் பெயர். இவர், டாக்டர், அம்பேத்கரின் இளமைக்கால பள்ளி ஆசிரியராக இருந்தார். பீம்ராவ் ராம்ஜி என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கருடன் அன்புடன் நடந்துகொண்டு, அவர் தனது வாழ்வில் உயர்வடைய உதவினார்.எனவே, தனது பெயரை தன்னுடைய ஆசிரியரின் நினைவாக அம்பேத்கர் என வைத்துக்கொண்டார்.

மேற்கண்ட ஓர் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல அறிஞர் பெருமக்கள் கூட இத்திரிபுக்குப் பலியாகி உள்ளனர். ஆனால், உண்மை என்ன?

இந்தக் கதையைப் பதிவு செய்துள்ளவர் யார் தெரியுமா? காந்தி ஓர் அகிம்சாவாதி, வீரசாவர்க்கர் என்ற நூல்களை எழுதிய தனஞ்செய்கீர் என்ற பார்ப்பனர்தான். இந்தப் பார்ப்பனர்தான் மூன்றாவதாக, அம்பேத்கரின் வாழ்வும் லட்சியமும் என்ற நூலை எழுதிப் பல லட்சங்களை சம்பாதித்தவர். இன்று, இந்தப் பொய் எல்லோராலும் ஆராயப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து நாம் முன்வைக்கும்சில கேள்விகள்: 1891ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர். அம்பேத்கர். அம்பேத்கர் என்ற பார்ப்பனர் ஒருவர் அப்போது வாழ்ந்திருந்தால், அவர் சந்ததியினர் இன்று என்னவானார்கள்? காந்தியின் சந்ததியினர், நேருவின் சந்ததியினர், ஏன் சங்கராச்சாரியின் சந்ததியினர்கூட இன்று அடையாளம் காட்டப்படும்போது, இவர்கள் குடும்பம் இன்று என்னவாயிற்று?

ராமானுஜர்,சேஷாத்திரி என்பன பார்ப்பனப் பெயர்கள். இந்தப் பெயரில் பல காலகட்டங்களில் பல பார்ப்பனர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அம்பேத்கர் ஒரு பார்ப்பனப் பெயரென்றால், அந்தப் பெயருடைய பார்ப்பனர் வேறு எவரும் இதுவரை இல்லையே அது ஏன்? வரலாறு எந்தக் காலகட்டத்திலுமே இதுவரை அம்பேத்கர் என்ற பெயரை அதற்கு முன்பு பதிவு செய்யவில்லை.

அம்பேத்கர் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களில் தனக்கு உதவியதாகக் கூறப்படும் அந்தப் பார்ப்பனர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. ஆனால், அவர் பரோடா மன்னர், முன்ஷி, காமத், மாலவங்கர் போன்ற தமக்கு உதவிய உயர்ஜாதியினரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை இதுதான்

அண்ணலின் பிறந்த ஊர் அம்பாவடே. அந்த ஊரின் பெயரை முன்னிலைப்படுத்தி அம்பாவடேகர் என்று தன் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். பின்னர் இப்பெயர் மராட்டிய இலக்கணப்படி, அம்பேத்கர் எனப் பதிவு செய்யப்பட்டது. (இங்கு குறிஞ்சியார், செஞ்சியார், மதுராந்தகத்தார், ஆத்தூரார் போன்றவற்றுடன் இதை ஒப்பிட்டால், ஒரு தெளிவு கிடைக்கும்.)

இதற்கு முழுக்காரணமானவர், அம்பேத்கரின் இளவயதில் அவரிடம் அன்பு காட்டிய ஆசிரியர் தாதா கேலுஸ்கர். இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கரின் தந்தை ராம்ஜிசக்பால் அவர்களின் இளமைக்கால நண்பர். இவர்தான் போதி மாதவ் என்ற புத்தரின் வரலாற்று நூலை அம்பேத்கருக்கு அளித்து, அவருக்கு இளவயதிலேயே பவுத்த சிந்தனை தோன்றக் காரணமாக இருந்தவர்.

இதுதான் பீம்ராவ் ராம்ஜி - அம்பேத்கராக மாறிய வரலாறு. இதற்கான ஆதாரத்தை, அம்பேத்கர் லண்டனிலிருந்து தனது ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் காணலாம்.

---------------------- சோபகன் - நன்றி: "எழுச்சி தலித் முரசு" - மே 2000

Tuesday 29 April, 2008

தீண்டாமை

இடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா

நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’